ஓவர் ஆக்டிங்; ஓவர்... ஆக்டிங்; கிரேஸி மோகன் பொளேர் பதில்!’’ - ஒய்.ஜி.மகேந்திரா உருக்கம்

ஓவர் ஆக்டிங்; ஓவர்... ஆக்டிங்; கிரேஸி மோகன் பொளேர் பதில்!’’ - ஒய்.ஜி.மகேந்திரா உருக்கம்
Updated on
1 min read

‘’சிவாஜியின் ஓவர் ஆக்டிங், ஓவர்... ஆக்டிங் என்று கிரேஸி மோகன் பொளேர் பதிலை எழுதியிருந்தார் என ஒய்.ஜி.மகேந்திரா பேசினார்.

கிரேஸி மோகனுக்கு புகழஞ்சலிக் கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது.

இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா கலந்துகொண்டு பேசியதாவது:

நான் காலேஜ் முடித்த கையுடன் நாடகத்துக்கு வந்தேன். ஆனால் கிரேஸி அப்படியில்லை. காலேஜ் படிப்பு முடித்துவிட்டு, அலுவலகம் ஒன்றில் ஐந்து வருடங்கள் வேலை பார்த்துவிட்டுத்தான் நாடகத்துறைக்கு வந்தார்.

அவருடைய காமெடி எழுத்துகள் மீது என்றைக்குமே எனக்குப் பொறாமை இருந்ததில்லை. ஆனால் கிரேஸி மோகனின் கவிதைகள் அபாரமானவை. அவரின் தமிழ்ப்புலமை வியக்கச் செய்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அவருடைய ஆன்மிகத் தெளிவு கண்டு பிரமித்திருக்கிறேன். இதெல்லாம் பார்த்து பொறாமைப்பட்டேன் என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

நான் சிவாஜி சார் வெறியன். அதேபோல் கிரேஸி மோகனுக்கும் சிவாஜியை ரொம்பவே பிடிக்கும். ஒருநாள் கிரேஸி போன் செய்தார். ‘மகேந்திரா... உங்க தலைவர் சிவாஜி சார் பத்தி எழுதிருக்கேன். படிச்சிப்பாரு’ன்னு சொன்னார். உடனே நானும் வாங்கிப் படிச்சேன். ஒருத்தர், ‘சிவாஜியோடது ஓவர் ஆக்டிங்தானே?’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு நானாக இருந்தால், கோபமாகியிருப்பேன். திட்டித்தான் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் இந்தக் கேள்விக்கு கிரேஸி மோகன் சொன்ன பதில்தான், கிரேஸி மோகனுக்கும் தமிழுக்கும் காமெடிக்குமான பந்தத்தை உணர்த்துகிறது.

‘சிவாஜியோடது ஓவர் ஆக்டிங்தானே?’ என்ற கேள்விக்கு கிரேஸி மோகனின் பதில்... ‘சிவாஜியோட ஓவர்... ஆக்டிங்’ அப்படின்னு பதில் சொல்லியிருந்தார்.

இப்படி வார்த்தைகள் கிரேஸி மோகன்கிட்ட வந்து விழுந்துக்கிட்டே இருக்கும்.

இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in