

‘பொன்னியின் செல்வன்’ இதிகாசத்துக்கு நான் சரியான முறையில் நியாயம் செய்ய வேண்டும் என செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
‘கோச்சடையான்’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. அத்துடன், பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்போது எம்.எக்ஸ். ப்ளேயர் நிறுவனத்துடன் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை வெப் சீரிஸாக உருவாக்கவுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த். எம்.எக்ஸ். ப்ளேயர் செயலியில் வெளியாகவுள்ள இதனை, சூர்யபிரதாப் இயக்கவுள்ளார்.
இதைப் பற்றிய அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன்பிறகு இதைப்பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது ட்விட்டரில் அதைப்பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.
‘பொன்னியின் செல்வன்’ நாவலின் அட்டைப் படத்தைப் பகிர்ந்து, “ ‘பொன்னியின் செல்வன்’ - இதுதான் இதிகாசம். இதற்கு நான் சரியான முறையில் நியாயம் செய்ய வேண்டும். ஆரம்பகட்ட வேலைகள் சரியான தெளிவுடன் நடந்துள்ளன என்பதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறேன். அடுத்தடுத்த முன்னேற்றங்களைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இறைவன் எங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார் செளந்தர்யா.
அத்துடன், பொன்னியின் செல்வனை டிஜிட்டல் திரையில் பார்க்க வேலைசெய்து கொண்டிருக்கிறேன் என்பதை ஹேஷ்டேக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.