

ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று வடிவேலுவின் பேச்சுக்கு விஜய் மில்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். இதில், 3 வேடங்களில் வடிவேலு நடிப்பதாக இருந்தது.
ஆனால், படக்குழுவினருக்கும் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சினையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்பு வடிவேலுவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. மேலும், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகே மற்ற படங்களில் நடிக்கத் தடை போட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
'நேசமணி' உலகளவில் ட்ரெண்ட்டானப் பிறகு தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை ஒருமையில் பேசினார். இது, சினிமாத்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடிவேலுவின் பேச்சு தொடர்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் தனது ட்விட்டர் பதிவில், “தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல!உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.