

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் மற்றொரு நாயகியாக மெஹ்ரீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கொடி’ படம்தான் தனுஷ் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த படம். 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அண்ணன் - தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் தனுஷ். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், 3 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்கி வருகிறார். இதில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இதில் அப்பா கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் ஒரே கட்டமாக படமாக்கி முடித்தது படக்குழு. இதனை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் படத்தின் மற்றொரு கதாபாத்திரப் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் தனுஷுக்கு நாயகியாக நடிக்க மெஹ்ரீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது படப்பிடிப்புக்கான ஆயத்தப் பணிகளில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது படக்குழு.
நவீன் சந்திரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார் ஓம் பிரகாஷ்.