

பதிவாளரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஐசரி கணேஷுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாண்டவர் அணியைச் சார்ந்த பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல், வருகிற 23-ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளில் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. கடந்த முறை வெற்றி பெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சங்கரதாஸ் சுவாமிகள் அணி’யும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஆனால், அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அக்கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதி இல்லை எனவும் மாற்று இடத்தை இன்று தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் திடீரென்று தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டார். உறுப்பினர்கள் சேர்க்கை, பதவி மாற்றம், தகுதி நீக்கம் உள்ளிட்டவற்றில் உள்ள குளறுபடிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் நிறுத்தம் தொடர்பாக பாண்டவர் அணியைச் சேர்ந்த பூச்சி முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தலை தற்போது நாங்கள் நடத்தவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நடத்துகிறார். இதே பதிவாளர் இந்த வாக்காளர் லிஸ்ட் சரி தான் என்று சொன்னதை வைத்து தான் தேர்தலே நடத்துகிறோம். இவர்களுக்கு நாங்கள் எப்படி தற்போது பதிலளிப்பது? இதனால் நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் போல் எந்தவொரு சங்கத்திலும் உறுப்பினர் பட்டியலே இல்லை என்று பதிவாளர் கையெழுத்திட்ட பேப்பர் எங்களிடம் உள்ளது. பதிவாளர் சட்டத்தை இந்த தமிழக அரசு தவறாக உபயோகிக்கிறது. ஐசரி கணேஷ் தோற்றுவிடுவார் என்று தெரிந்துவிட்டது. அதன் விளைவு, காவல்துறை தரப்பின் மூலம் நிறுத்தினார்கள். பதிவாளர் தொடங்கி அனைவர் மீதும் வழக்கு தொடுப்போம். பதிவாளரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
நாமக்கல்லைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சேர்க்க மூன்று முறை கடிதம் அனுப்பியும் வரவில்லை. நடிகர் சங்க சட்டத்தின் படி 2 முறை பதிலளிக்கவில்லை என்றால் நீக்கலாம் என உள்ளது. ஆனால், நாங்கள் நீக்கவில்லை. அவர்களை தொழில்முறை நடிகர்களிலிருந்து மாற்றியிருக்கிறோம். அனைத்து சலுகைகளும் அவர்களுக்கும் உண்டு.
விஷால் மற்றும் கார்த்தி போகும் போது, 'நீங்கள் தோற்று விடுவீர்கள். தேர்தலில் நிற்காதீர்கள். 5 அமைச்சர்கள் மற்றும் பல எம்.எல்.ஏக்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ஆதரவாகச் செயல்படப் போகிறார்கள்' என்று சொல்லியிருக்கிறார் ஐசரி கணேஷ். இதை அவர் இல்லை என்று சொல்ல முடியுமா? அவருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார் பூச்சி முருகன்.