ஜூன் 25-ம் தேதி ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜூன் 25-ம் தேதி ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, வருகிற 25-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்பு ஜோடியாக நடிக்க கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘மாநாடு’ படத்துக்காக வெளிநாட்டில் தங்கி தன்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ளார் சிம்பு. மேலும், தற்காப்புக் கலைகளையும் கற்றுள்ளார். இந்தப் படத்தில், இயக்குநர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் கே.எல். எடிட் செய்கிறார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற இருக்கிறது. எனவே, விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தது படக்குழு.

தற்போது விசா கிடைத்துள்ள நிலையில், வருகிற 25-ம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் படமாக உருவாகும் இது, இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘முஃப்தி’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. இவருடன் சேர்ந்து கெளதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் ‘முஃப்தி’ படத்தை இயக்கிய நரதனே தமிழிலும் இயக்க, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in