

நேரம் இல்லாமல், அவசரம் அவசரமாக சிலருடைய சுயநலத்துக்காக நடக்கும் தேர்தலாகத்தான் இது தெரிகிறது என நிதின் சத்யா தெரிவித்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் நிதின் சத்யா, “ ‘தேர்தல் ரத்து’ என நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார், தேர்தலை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன். ஆனால், ‘தேர்தல் மறுபடியும் நடைபெறுகிறது’ என தற்போதுவரை அவர் அறிவிக்கவில்லை. இருந்தாலும், நாங்கள் எல்லோருக்கும் செய்தி அனுப்பி விட்டோம். சென்னையில் இருப்பவர்கள் சரி, வெளியூரில் இருந்து வருபவர்கள் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரிக்குப் போவார்களா? இல்லை விவரம் தெரிந்து இங்கு வருவார்களா? என்ற குழப்பம் இருக்கிறது.
கடந்த தேர்தலைப் பார்த்தால், காலை 7 மணிக்கெல்லாம் தேர்தல் நடைபெறும் இடம் அவ்வளவு பரபரப்பாக இருந்தது. ஆனால், இன்று அப்படியொன்றும் கூட்டம் இல்லை. நேரம் இல்லாமல், அவசரம் அவசரமாக சிலருடைய சுயநலத்துக்காக நடக்கும் தேர்தலாகத்தான் இது தெரிகிறது.
பணத்தால் இந்தத் தேர்தலை வாங்கலாம் (வெல்லலாம்) என்பது நாசருக்குத் தெரிந்திருக்கலாமோ என்னமோ... மிகப்பெரிய சீனியர், தலைவர் பதவியில் இருப்பவர் அப்படிச் சொல்வது என்பது தவறான கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.