

பொறுமையாக பார்க்க வேண்டிய படம் என்று தனது தயாரிப்பான 'என்.ஜி.கே' குறித்து எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சூர்யாவின் படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை 'என்.ஜி.கே' படத்துக்கு கிடைத்துள்ளது. 10 கோடியை கடந்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படம் பொறுமையாக பார்க்க வேண்டிய படம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “'என்.ஜி.கே' பொறுமையாக பார்க்கவேண்டிய படம்.. எனவே ரிலாக்ஸாக அமர்ந்து பிரதமான நடிப்பை ரசியுங்கள். உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் நிலையாகவும் வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு
'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'ராட்சசி' படத்தையும் ஜூனில் வெளியிட திட்டமிட்டுள்ளது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்.