

வடசென்னைக் கதாபாத்திரத்தில் பேச வெவ்வேறு விதமான பாணிகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார் சந்தானம்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ராம்பாலா இயக்கிய இந்தப் படத்தில், வடசென்னையைச் சேர்ந்தவராக நடித்தார் சந்தானம். ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்திலும், ‘சென்னைனா நான் தானே பேசணும்’ என சென்னையைச் சேர்ந்தவர் என்பதைத் திரையில் காட்டியிருப்பார்.
தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஏ 1’. ஜான்சன் இயக்கியுள்ள இந்தப் படத்திலும் வடசென்னையைச் சேர்ந்தவராக நடித்துள்ளார் சந்தானம். ஆனால், உண்மையில் சந்தானம் தென்சென்னையைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த சந்தானத்திடம் கேட்டபோது, “நான் பேசுவது தென்சென்னை ஆள் போல இருக்கலாம். ஆனால், என் படங்களில் நான் நடிக்கும் கதாபாத்திரங்களாக மாறிவிடுவேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பார்த்தாவோ, ‘சிறுத்தை’ காட்டுப்பூச்சியோ, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நல்லதம்பியோ... எதுவாக இருந்தாலும் சரி. வடசென்னைக் கதாபாத்திரத்தில் பேச வெவ்வேறு விதமான பாணிகள் உள்ளன. அங்கு எல்லோரும் நாம் நினைப்பதைப் போலப் பேசுவதில்லை. வெவ்வேறு உடல் மொழிகளும் உள்ளன.
‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் இருந்து ‘ஏ 1’ படத்தின் கதாபாத்திரம் வித்தியாசப்படும். நான் 150 படங்களில் நடித்திருக்கிறேன். பல காட்சிகளில் குடித்துவிட்டுப் பேசுவது போல நடித்திருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பேசும் விதம், உடல் மொழி என வித்தியாசங்கள் கொண்டு வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.