

ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவர்கள், அவரை ‘பெண் சமுத்திரக்கனி’ என விமர்சித்தனர். அந்த விமர்சனத்துக்கு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார் ஜோதிகா.
‘காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகா நடித்த படம் ‘ராட்சசி’. அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி, விஜே அகல்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோதிகா, “ட்விட்டரில் சிலர் ‘பெண் சமுத்திரக்கனி’, ‘சாட்டை’ படம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்தப் படத்தில், அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், படம் அப்படியில்லை. 100 படங்கள் இதேபோன்று வந்தாலும்கூட, சமூகத்துக்கு இது தேவைதான்.
பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப்பற்றிப் பேச யாருமே தயாராக இல்லை. நாயகன் வருவார், 2 - 3 நாயகிகளைக் காதலிப்பார், இடைவேளை, எமோஷன், க்ளைமாக்ஸ் என இருக்கும். அதைப்பற்றி யாருமே பேசுவதே இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படம் மட்டும் ஏன் ‘பள்ளிக்கூடம்’, ‘சாட்டை’ படங்கள் மாதிரி இருக்கிறது எனச் சொல்வது ஏன் எனத் தெரியவில்லை.
அகரன் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள். அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும்போது, அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடமாக ஆசிரியர்களே வரவில்லை. ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும்? தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான். ஆகவே, இதே மாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம்” என்றார்.