

மாற்றம் தேவைப்படுகிற ஒரு விஷயம் என்று நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகர் பார்த்திபன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “ஒரு பொதுத்தேர்தல் மாதிரி பயங்கர பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் உள்ள இரண்டு அணியுமே நல்லது செய்ய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள்.
சுமார் மூன்றரை ஆண்டுகளாக இருந்த பாண்டவர் அணியும், மிகச் சிறப்பான வேலைகளைத் தான் செய்திருக்கிறார்கள். ஆனால், மாறுதல் என்பது எப்போதே நமக்குத் தேவைப்படுகிற ஒரு விஷயம். இவ்வளவு பெரிய போட்டி, தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடிகளால் ஒரு நாளைக்கு முன்பு அறிவித்திருப்பது, என்னைப் போன்றவர்களுக்கே கஷ்டம். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அனைவரும் கை கோத்து இந்தக் கட்டிடம் உருவாக வேலை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.