பாண்டவர் அணியைக் கடுமையாக சாடிய சாந்தனு

பாண்டவர் அணியைக் கடுமையாக சாடிய சாந்தனு
Updated on
1 min read

பாண்டவர் அணியைக் கடுமையாக சாடி சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் தபால் வாக்கு அளிக்க, வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால் ரஜினியால் வாக்களிக்க முடியவில்லை. இது தொடர்பாக தனது வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ரஜினி. மேலும், நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் இடம் நேற்று (ஜூன் 22) இரவு தான் முடிவானது.

தேர்தல் இடம் முடிவானவுடன், ட்விட்டர் தளத்தில் பலரும் விஷால் அணிக்கு ஆதரவாக ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். இது தொடர்பாக நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், “ட்விட்டரில் இருக்கும் செல்வாக்கை வைத்து சிலர் இங்கே சிலருக்கு ஓட்டு கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தேர்தல் என்ற பெயரில் எவ்வளவு முட்டாள்தனம் நடக்கிறது என்பதற்கு நடிகர் சங்கத் தேர்தலே சாட்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்தையும் தாண்டி நமக்குள் ஒரு பந்தம் இருக்கிறது. ஆனால் கண்ட பூச்சி எல்லாம் “பாக்யராஜ் யாரு? நடிகரா?” என்று கேட்பதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது. நாசர், கார்த்தி, விஷால் பேசும்போது கூடவே செட் ப்ராப்பர்ட்டிகளையும் பேச விட்டால் உறவுகள் கெட்டுப் போய்விடும்.

உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே முன்னால் வந்து கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  மக்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். இதை விட பெரிய பிரச்சினைகள் எல்லாம் சமுதாயத்தில் இருக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். செல்வாக்கு மிக்கவர்களே, நீங்கள் உங்கள் வேலையைத் தான் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இதை தயவுசெய்து நல்ல விஷயங்களுக்கு சேமித்து வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார் சாந்தனு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in