

நீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது என்று தந்தை விக்ரம் குறித்து அவரது மகன் துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
’அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கான 'ஆதித்யா வர்மா' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதில் நாயகனாக நடித்துள்ள துருவ் விக்ரமின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இணையத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடைபெற்றது என்றும், முழுக்கவே மகனுடன் விக்ரம் இருந்து பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அப்பா விக்ரம் குறித்து நேற்று (ஜூன் 19) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருவ் விக்ரம் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒவ்வொரு நாளும் வந்ததற்கு, விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு, எப்போதும் நான் சிறப்பாகச் செயல்பட என்னை உந்தியதற்கு, எல்லோரும் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ததற்கு, லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு, எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் தெளிவாக இருந்ததற்கு, நான் நம்பிக்கை இழப்பதை அனுமதிக்காமல் இருந்ததற்கு, எனக்காக 'ஆதித்யா வர்மா'வைத் தந்து, உருவாக்கியதற்கு, முடிந்த எல்லாவற்றையும் செய்ததற்கு, எப்போதும் எனக்கு ஆதரவு தந்ததற்கு, உங்களுக்குத் தெரிந்த அத்தனையையும் தொடர்ந்து எனக்குக் கற்றுத் தந்ததற்கு.... நீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.
இந்தப் படத்துக்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்தீர்கள் என்பதைத் தெரிந்த ஒருவர், டீஸரில் உங்கள் பெயர் எங்கே என்று கேட்டார். அது என் பெயருக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் இருக்கிறது என்றேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. உங்களைப் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம்.
'ஆதித்யா வர்மா' படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிந்துள்ளனர். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ளனர்.