

சினிமாவுக்கு நீங்கள் ஒரு இனிமையான பரிசு என மறைந்த கிரேசி மோகனுக்குப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.
கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.
‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“கிரேசி மோகன் இறந்து போனதில் மனமுடைந்து போனேன், அதிர்ச்சியானேன். எனது தந்தையின் நெருங்கிய நண்பர். எனது இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன், அவருடன் உட்கார்ந்து, அவரது யோசனைகளைக் கேட்டுப் பெற்றது நினைவில் இருக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கிரேசி மோகன் சார். நீங்கள் சினிமாவுக்கு ஒரு இனிமையான பரிசு. உங்கள் மறைவு கண்டிப்பாக உணரப்படும்” என ட்விட்டரில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் காயத்ரி ரகுராம்.