

2005-ல் எனது ஆங்கிலம் மோசமாக இருந்தது. அதைச் சரிசெய்ய நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தேன் எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘பக்கிரி’. கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் இது. தமிழ் மட்டுமின்றி, இன்னும் சில இந்திய மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாகி இருக்கிறது.
இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த தனுஷ், தான் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டது எப்படி எனப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“எதுவும் எனக்கு இயல்பில் வராது என்பதால், நான் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பங்காக இருக்கும்போது, அதை முயற்சி என்று சொல்ல முடியாது.
2005-ல் எனது ஆங்கிலம் மோசமாக இருந்தது. அதைச் சரிசெய்ய நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தேன். ஒரு புத்தகத்தை முடிக்க எனக்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். ஒரு பகுதியை முடிக்கும் முன்பே தூங்கிவிடுவேன். ஆனால், கதைகள் எனக்கு எப்போதுமே ஆர்வம் தந்தன. படிப்பது ஒரு பழக்கமானபின், அதற்காகத் தேவைப்படும் முயற்சி குறைந்தது.
‘புதுப்பேட்டை’ சமயத்தில் என் நண்பர்கள் பலரும் ‘த டாவின்சி கோட்’ புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. நான் உடனே அதைப் படித்தேன். நல்லவேளை அதைப் படித்தேன். அதுதான் எனக்குள் இருக்கும் வாசகனை எழுப்பியது. பல புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். படிக்காமல் எவ்வளவு நேரம் வீணடித்திருக்கிறேன், இன்னும் படிக்க வேண்டியது எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பது புரிந்தது. இதெல்லாம் எனது ஆங்கில அறிவை இவ்வளவு வருடங்களாக வளர்த்துக்கொள்ள உதவின.
ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் மரியாதைக் குறைவாகப் பார்க்கிறார்கள். நான் ஐரோப்பாவில் ‘பக்கிரி’ படப்பிடிப்பில் இருக்கும்போது, பலருக்கும் நான் ஆங்கிலம் பேசியதில் ஆச்சரியம். எப்படியும் ஆங்கிலம் என்பது தொடர்புக்கான மொழி மட்டும்தான்.”
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ்.