நடிகர் சங்கத்துக்கு கார்த்தி ரூ. 1 கோடி நிதியுதவி

நடிகர் சங்கத்துக்கு கார்த்தி ரூ. 1 கோடி நிதியுதவி
Updated on
1 min read

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார் கார்த்தி.

நடிகர் சங்கத்துக்குக் கட்டிடம் கட்டுவோம் என வாக்குறுதி அளித்து கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’, அதைச் செயல்படுத்தியும் வருகிறது. ஆனால், பல்வேறு சிக்கல்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை.

இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டியதோடு மட்டுமின்றி, பலரிடமும் நிதியுதவி பெறப்பட்டது. இருந்தாலும், திட்டமிட்டபடி கட்டிடத்தைக் கட்டி முடிக்கப் போதுமான நிதி இல்லை.

இந்நிலையில், நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டுவதற்காக ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார் கார்த்தி. கடந்த முறை பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்தி, இந்த முறையும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.

விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

‘பாண்டவர் அணி’யை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in