

சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் தலைப்பை, இந்தப் படத்துக்கு வைத்துள்ளதாக செய்தி வெளியானது. இந்தத் தலைப்பை வைத்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸிடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, இந்தச் செய்தியை அவர்கள் மறுத்தனர். தற்போது படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால், தலைப்பு குறித்து இன்னும் யோசிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம், ரவிக்குமார் இயக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கும் படம் எனத் தொடர்ச்சியாகக் கையில் படங்கள் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.