திரை விமர்சனம்- கேம் ஓவர்

திரை விமர்சனம்- கேம் ஓவர்
Updated on
2 min read

வீடியோ கேம் வடிவமைப்பாள ரான தாப்ஸி, பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். தனியாக இருக்கும் அந்த பங்களாவில் அவரது பாதுகாப்புக்காக ஒரு காவ லாளியும், வீட்டு வேலைகளுக்காக வினோதினியும் உடன் இருக்கின்ற னர். தாப்ஸி கையில் குத்தியிருக்கும் ஒரு டாட்டூ அவ்வப்போது கடும் வலியைத் தருகிறது. ஒரு கட்டத்தில் மருத்துவரை அணுகி, அதை அழித்து விட முயற்சிக்கிறார். அது தோல்வி யில் முடிய, டாட்டூ வரைந்துகொண்ட கம்பெனிக்கே செல்கிறார். இறந்து போன ஒரு பெண்ணின் அஸ்தி அந்த டாட்டூவில் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் அப்போது தெரியவருகிறது. ஏற்கெனவே இருளைக் கண்டு பயப்படும் தாப்ஸி இதனால் மேலும் பீதியடைகிறார். இதற்கிடையில், நகரில் தனியாக வசிக்கும் இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்கிறது ஒரு மர்ம கும்பல். அவர் கள் தாப்ஸியையும் நெருங்கு கின்றனர். தாப்ஸி இதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை உளவியல் ரீதியாகவும், அமானுஷ்யம் கலந்தும் மிரட்டலாக சொல்கிறது ‘கேம் ஓவர்’.

பார்வையாளர்களை முட்டாளாக கருதி, முதன்மை கதாபாத்திரத்தின் வாழ்க்கை கதை சுருக்கத்தை வாய்ஸ் ஓவராக ஒலிக்கவிடுவது, ஆடல் - பாடல் காட்சிகளை சம்பந்தமில்லாமல் செருகுவது போன்ற எதிலும் நேரத்தை விரயம் செய்யாமல் தீவிர மான காட்சி புனைவுகளால் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

தாப்ஸி, வினோதினி இருவரது அன்றாட நிகழ்வுகளைக் காட்டும் காட்சிகளில் வெளிப்படும் காட்சிக் கோணங்கள், பின்னணி இசை ஆகியவை சேர்ந்து ஆரம்பத்திலேயே படத்துக்கு ஒரு மர்மத் தன்மையை கொடுத்துவிடுகின்றன. கேமராவின் பார்வை ஊஞ்சலில் போய் முடியும் போது எல்லாம் ஊஞ்சல் குறித்தான மர்மத் தன்மை அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. குறைந்தபட்ச கதாபாத் திரங்கள், ஒரே பங்களா, முழுக்க இருள் என கதை நகர்ந்தாலும், வீடியோ கேம், டாட்டூ, அதில் ஆன்மா ஆகியவை புது திகில் அனுபவம்.

வழக்கமாக ‘சீரியல் கில்லர்’ படம் என்றால், கொலைகாரன் யார்? அவன் ஏன் இவ்வாறு செய்கிறான் என்பதை தேடி படம் நகரும். ஆனால், இதில் கதாசிரியர் காவ்யா ராம்குமாரும், இயக்குநர் அஸ்வின் சரவணனும் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று கதை சொல்லியிருக்கின்றனர். பெண்ணை மையமாக வைத்து சுழலும் கதைக்களத்தை பெரிய அளவில் எழுத்து தாங்கி சுமக்கிறது. தாப்ஸிக்கு நேர்ந்த அசம்பாவிதத்தை பூடகமாக காட்டும் பொறுப்பு உணர்வு பாராட்டுக்குரியது. பெண்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் அவர்களை மனரீதியாக எப்படி பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது திரைக்கதை. ‘இருட்டு வந்தாலே யாரோ தொடுவதுபோல இருக்கிறது’ என்ற வசனம் அதற்கு உதாரணம்.

தாப்ஸியை மட்டுமே நம்பி படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத் தின் முழு பாரத்தையும் அவர் தனது நடிப்பால் சுமக்கிறார். பயம் கவ்விய பார்வை, படிப்படியாக தன்னம் பிக்கை இழக்கும் உடல்மொழி என சொப்னா கதாபாத்திரத்தில் தன்னை கரைத்துக்கொண்டிருக்கிறார். சொப் னாவுக்கு என்ன ஆகுமோ என்ற மனநிலையையும் தாண்டி, ‘எனக்கு என்ன ஆகுமோ’ என்று பார்வையாளர் களை கருத வைக்கிறது ஏ.வசந்த் ஒளிப்பதிவு.

துணை கதாபாத்திரமாக ஓரிரு காட்சிகளுக்கு மட்டும் வந்துபோகா மல் திரைக்கதைக்கும், தாப்ஸி பாத்தி ரத்துக்கும் உறுதுணையாக தாய்மை நிறைந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் வினோதினி.

கலை இயக்குநர் சிவசங்கர், எடிட்டர் ரிச்சர்ட் கெவின் கவனிக்க வைக்கின்றனர். எடிட்டிங்கில் குறிப் பாக, தாப்ஸி தற்கொலைக்கு முயன்று, கால் முறிந்து, சிகிச்சை பெற்று, மெல்ல சக்கர நாற்காலிக்கு மாற்றப்படும் காட்சிகளை துரிதமாக காட்டுவது தமிழ் சினிமாவின் முதிர்ச்சியை காட்டுகிறது. இரைச்சல் மூலம் திகிலூட்டாமல் சஸ்பென்ஸ் திரில்லருக்கு அவசியமான இசை யையும், ஒலியையும் அளவாகக் கொடுத்திருக்கிறார் இசையமைப் பாளர் ரான் ஈத்தன் யோஹன்.

சைக்கோ கொலையாளி, அவ னது கூட்டாளிகள் பற்றியும், அவர் களை காவல் துறை உட்பட யாருமே நெருங்க முடியாதது ஏன் என்பதையும் ஓரிரு காட்சிகளிலாவது சொல்லியிருக்கலாம்.

பெண்களை வெறும் உடம்பாக பார்க்கும் ஆண்களின் மனநிலை மாற வேண்டும். பாலியல் வக்கிரங்கள் ஒருவகையில் புற்றுநோய் போன் றதே. அதில் இருந்து மீள போராடித் தான் தீரவேண்டும். பெண்கள் எந்த சூழலிலும் போராட்ட குணத்தை விட்டு விடக் கூடாது என்பதை உருவக பாணியில் வலியுறுத்துகிறது படம். இவற்றை நேரடியாக, மேலும் அழுத்தமாக பதிவுசெய்திருந்தால் ‘கேம் ஓவர்’ இன்னும் கொண்டாடப் பட்டிருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in