

ஆர்யா நடித்துவரும் ‘டெடி’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘நாணயம்’, ‘மிருதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்தி செளந்தர்ராஜன். இவர் தற்போது இயக்கிவரும் படம் ‘டெடி’. நிஜத்தில் கணவன் - மனைவியான ஆர்யா - சயீஷா இருவரும் இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சிவநந்தீஸ்வரன் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர்.
இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் கடந்த மே 23-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இதன் படப்பிடிப்பு, பல்வேறு நாடுகளிலும் நடைபெற இருக்கிறது.
ஆர்யா தற்போது சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ படத்தில் நடித்துள்ளார். இந்துஜா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மஹிமா நம்பியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்யா.