

நயன்தாரா நடிப்பில் ஜூன் 14 அன்று வெளியாகவிருந்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சக்ரி டோலேட்டி இயக்கத்தில், 'ஹஷ்' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவானது கொலையுதிர்காலம். இந்தியில் 'காமோஷி' என்ற பெயரில் தமன்னா நடித்து வந்தார்.
இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தில் படக்குழுவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் பல்வேறு சிக்கல்களை இப்படம் சந்தித்து வந்தது.
இது போதாதென்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவியின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. தற்போது படம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடங்கி, இந்தி, தமிழ் என இரண்டு பதிப்புகளும் நாளை (ஜூன் 14) அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'கொலையுதிர் காலம்' என்ற தலைப்பு எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ள நாவலின் தலைப்பு. அதை பயன்படுத்தும் உரிமை குறித்து வழக்கு தொடரப்பட்டதால் படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இன்று காலை வரை படத்தின் முன்பதிவு திரையரங்குகளில் நடந்து கொண்டிருந்தன.
தற்போது படத்தின் வெளீயீடு தள்ளிவைக்கப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. விரைவில் என்று போட்டு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது தயாரிப்பு தரப்பு. படத்தின் முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.