

ஒன்றாக அமர்ந்து பேசியிருந்தால் இந்த நடிகர் சங்கத் தேர்தலைத் தவிர்த்திருக்கலாம் என்று வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆர்யா தெரிவித்தார்.
2019-2022ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் காலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு, அந்த உடையிலேயே வந்து வாக்களித்தார் ஆர்யா.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “ஐசரி சார் தொடங்கி அனைவருமே கடந்த தேர்தலில் இணைந்து பணிபுரிந்தார்கள். நடிகர் சங்க கட்டிடம் கட்டணும், பென்ஷன், மருத்துவ உதவிகள என அனைத்துமே சரியாக நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் தொடங்கியது. அதே எண்ணம் தான் இப்போதும் அனைவரிடமும் உள்ளது.
ஏதோ ஒரு மனஸ்தாபம், இவ்வளவு பெரிய தேர்தலில் வந்து நிற்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலை தவிர்த்திருக்கலாம். ஒன்றாக அமர்ந்து பேசி, சுமூகமாக முடித்திருக்கலாம். இந்தத் தேர்தலில் யாருமே தவறானவர்கள் என்று சொல்லமாட்டேன். நாசர் சார், விஷால், கார்த்தி என அனைவருமே கடுமையாக உழைத்து தான் நடிகர் சங்கக் கட்டிடத்தை இந்தளவுக்கு கட்டியுள்ளனர். அதில் எவ்வித மாற்றுக் கருத்துமே இல்லை.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் குறைச் சொல்லி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். எந்த அணி வந்தாலும் வெற்றி தான். என்னுடைய முழு ஆதரவு பாண்டவர் அணிக்குத் தான்” என்று தெரிவித்தார் ஆர்யா.