ஓட்டு போடவந்த என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்: கொல்லங்குடி கருப்பாயி வேதனை

ஓட்டு போடவந்த என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்: கொல்லங்குடி கருப்பாயி வேதனை
Updated on
1 min read

ஓட்டு போடுவதற்காக ஓடோடி வந்தேன். ஆனால், ஓட்டு இல்லையென என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார் கொல்லங்குடி கருப்பாயி.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சிவகங்கையில் இருந்து வந்துள்ளார் நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி. ஆனால், அவருக்கு ஓட்டு இல்லை என்று கூறப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

“என்னைப் பெத்த சாமி விஷால் எனக்கு உறுப்பினர் அட்டை வாங்கிக் கொடுத்தார். அந்த அட்டை இருந்தும் என்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், ஓட்டு போடுவதற்காக ஓடோடி வந்தேன். ஆனால், ஓட்டு இல்லையென என் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார் கொல்லங்குடி கருப்பாயி.

சிவகங்கை மாவட்டம், மதுரை - தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ம் ஆண்டு ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாண்டியராஜன். இப்படத்தில், இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது.

1993-ம் ஆண்டு இவரது கலைச்சேவையைப் பாராட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கியுள்ளார்.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலின்போது கொல்லங்குடி கருப்பாயி, சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அவர் கஷ்டப்படுவதை அறிந்த விஷால், நடிகர் சங்க உறுப்பினராக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in