

விஜய் - சிம்புதேவன் இணையும் படத்தில் நாங்கள் பணியாற்றவில்லை என்று மகுடா நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப இயக்குநர் பீட் தெரிவித்தார்.
விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, சிம்புதேவன் இயக்கவிருக்கும் படம் விரைவில் துவங்க இருக்கிறது. நட்டி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இயக்குநர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் நட்டி மற்றும் தயாரிப்பாளரான செல்வகுமார் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
இப்படத்தில் 'மஹாதீரா', 'நான் ஈ', 'எந்திரன்' உள்ளிட்ட படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய மகுடா நிறுவனம் பணியாற்ற இருப்பதாகவும், விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராக சீனிவாஸ் மோகன் பணியாற்ற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
'பாஹூபலி' படப்பிடிப்பில் இருந்த சீனிவாஸ் மோகனிடம் இது குறித்து கேட்டபோது, "அப்படத்தில் நான் பணியாற்றவில்லை. இப்போது 'ஐ', 'அனேகன்' மற்றும் 'பாஹூபலி' படங்களில் பிஸியாக இருக்கிறேன்" என்றார்.
'எந்திரன்' படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்தன் மூலம் இந்திய சினிமா உலகில் சீனிவாஸ் மோகன் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், மகுடா நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப இயக்குநர் பீட் என்பவரிடம் இது தொடர்பாக கேட்டபோது, "அப்படியா? இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல். இதுவரை அப்படம் தொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை.
இது தொடர்பாக வந்திருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அப்படத்தில் பணியாற்றுவது தொடர்பாக எங்களை தொடர்பு கொண்டால், பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.