

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் 'கிரேசி' மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.
'கிரேசி' மோகனின் இயற்பெயர் மோகன் ரங்கமாச்சாரி. 1952-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி பிறந்தார். பொறியியல் பட்டதாரியான இவர் கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கினார். மாது மிரண்டால், சாட்டிலைட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது உள்ளிட்ட 5000க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர், கமல்ஹாசன் மூலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வசனம் எழுதினார்.
'சதிலீலாவதி', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'பஞ்ச தந்திரம்', 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்', 'காதலா காதலா', 'அருணாச்சலம்', 'மிஸ்டர் ரோமியோ', 'தெனாலி' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கல்யாணத்துக்கு கல்யாணம், விடாது சிரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்த 'கிரேசி' மோகன் 100 சிறுகதைகளை எழுதியுள்ளார். தினம் ஒரு வெண்பா எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதியுள்ளார்.
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 'கிரேசி' மோகன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.