

ஆபாசம் இல்லாத நகைச்சுவையைக் கையாண்டவர் கிரேசி மோகன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரின் மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், இலக்கிய உலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கிரேசி மோகன் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் எஸ்.வி.சேகர். ''1960-களிலேயே நாங்கள் பழக்கமானவர்களாக இருந்தோம். இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தோம். 1976-ல் என்னுடைய நாடகத்தை எழுதும் வாய்ப்பை அவருக்குக் கொடுத்தேன்.
அந்த நாடகத்தின் பெயர் ’கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’. அந்த நாடகத்தின் மூலமாகத்தான் அவர் கிரேசி மோகன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். மிகவும் நல்ல மனிதர். ஈடு இணையில்லாத நகைச்சுவை உணர்வு அவருக்குண்டு. ஆபாசம் இல்லாத நகைச்சுவையை அவ்வளவு அருமையாகப் பேசுபவர் கிரேசி மோகன்.
கூட்டுக்குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். அவருக்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. யாரையும் விரோதம் செய்துகொள்ள மாட்டார். அத்தகைய நல்ல குணம் கொண்டவர். எல்லாவற்றையும் தாண்டி ஓர் ஆன்மிகவாதி. கடவுள்களின் படங்களைத் தத்ரூபமாக வரையும் கலைஞர். வெண்பாக்கள் எழுதக்கூடியவர்.
கடவுளுக்குப் பிடித்தவர்களை விரைவில் அழைத்துக் கொள்வார் போல இருக்கிறது. உண்மையிலேயே இது ஓர் அதிர்ச்சியான செய்தி'' என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.