

‘கனா’ படத்திலும் தெலுங்கு ரீமேக்கிலும் சிவகார்த்திகேயன் இடம்பெற்றுள்ளார்.
பாடலாசிரியர், பாடகர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அவருடைய அப்பாவாக சத்யராஜ் நடித்தார்.
‘எஸ்கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சிவகார்த்திகேயன் முதன்முதலாகத் தயாரித்த படம் இது. மேலும், கிரிக்கெட் கோச்சாகவும் கெஸ்ட் ரோலில் நடித்தார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் (2018) டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸான இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமான ‘கெளசல்யா முருகேசன்’ என்பதைக் கொஞ்சம் மாற்றி, ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.
தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். பிமநேனி சீனிவாச ராவ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மூன்றாவது தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ படத்தின் டீஸர் நேற்று (ஜூன் 18) வெளியானது. அதன் இறுதியில், சிவகார்த்திகேயனும் இடம்பெற்றுள்ளார். ‘கனா’ டீஸரின் இறுதியில் இடம்பெற்றதைப் போலவே காஸ்ட்யூம் கூட மாற்றாமல் இந்த டீஸரிலும் இடம்பெற்றிருப்பதால், தமிழுக்காக எடுக்கப்பட்ட சிவகார்த்திகேயன் காட்சிகளையே தெலுங்கிலும் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது.