சினிமாவுல எனக்கு நல்ல ஓபனிங்; அதுக்கு கிரேஸிதான் காரணம்!’’ - விசு நெகிழ்ச்சி

சினிமாவுல எனக்கு நல்ல ஓபனிங்; அதுக்கு கிரேஸிதான் காரணம்!’’ - விசு நெகிழ்ச்சி
Updated on
1 min read

’’கிரேஸி மோகன், தன்னோட முதல் டிராமாலயே எனக்குள்ளே ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தினாரு. அதேசமயம், சினிமாவுக்குள்ளே ஒரு நல்ல ஓபனிங் அமைஞ்சதுக்கு, ஒருவகைல கிரேஸி மோகன் தான் காரணம்’’ என்று இயக்குநர் விசு நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நடிகரும் இயக்குநருமான விசு, கிரேஸி மோகன் குறித்த தன் நினைவுகளை தனியார் இணையதளச் சேனலில்  பகிர்ந்துகொண்டார்.

‘’கிரேஸி மோகன் வயதிலும் எனக்கு இளையவர்தான். ஆனா அவரின் பேனா, மிகப்பிரமாண்டமானது. அந்தப் பேனாவும் இப்போது உறங்குகிறது.

70கள்லயே நான் டிராமா போட ஆரம்பிச்சு, விஸ்வரூபமெடுத்துக்கிட்டிருக்கேன். அந்த சமயத்துல 75 அல்லது 76ன்னு நினைக்கிறேன்... எஸ்.வி.சேகருக்கான மோகன் ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’னு ஒரு டிராமா போட்டார். 19 வயசுலேருந்து 30 வயசு வரைக்கும் இருக்கற அந்த இளைய பட்டாளத்தை, அப்படியே தன்னோட பாக்கெட்டுக்குள்ளே போட்டுக்கிட்டார் கிரேஸி மோகன். இன்னும் சொல்லப்போனா, அந்த சமயத்துல எனக்கொரு தாழ்வுமனப்பான்மையே ஏற்பட்டுச்சுன்னுதான் சொல்லணும்.

அடுத்தாப்ல ஒருநாள்... பாலசந்தர் சார் கூப்பிட்டு விட்டார். ‘கலாகேந்திரா மாதிரி ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறோம். அதுக்கு ஒரு படம் பண்றோம். நடிகை லட்சுமிதான் டைரக்ட் பண்றாங்க. நீ கதை, திரைக்கதை, வசனம் பண்ணனும். முடியுமா’னு கேட்டார். சரின்னு சொல்லிட்டுக்கிளம்பினேன்.

அப்போ என்னை நிறுத்தி, ‘வேற யார் மூலமாவது உனக்குத் தகவல் தெரிஞ்சாலும் தெரியலாம். இதுக்கு முதல்ல கிரேஸி மோகனைத்தான் கேட்டேன். ஆனா அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்னு பாலசந்தர் சார் சொன்னார்.

இதுக்குப் பிறகு, நான் நேரா கிரேஸி மோகன்கிட்டப் போனேன். எல்லாத்தையும் சொல்லி, ‘’நீ ஏன் இந்த புராஜக்ட் பண்ணல’ன்னு கேட்டேன். அதுக்கு சிலபல காரணங்களையெல்லாம் சொன்னார். அதுக்குப் பிறகு, நான் எழுதினேன். அதுதான் ‘மழலைப் பட்டாளம்’. மிகப்பெரிய ஹிட்டாச்சு. இப்படி ஒரு ஓபனிங் கிடைக்க, கிரேஸி மோகன் ஏதோவொரு வகைல காரணமா இருந்தாரு.

என்னுடைய ‘சிகாமணி ரமாமணி’ படத்துல மனோரமாவோட கணவரா நடிச்சார் கிரேஸி மோகன். ஒருநாள், ஷூட்டிங்கல் அவரோட வேலைகள் முடிஞ்சதும், ‘மோகன், வேலை முடிஞ்சுது. நீ வீட்டுக்குக் கிளம்பலாம்’னு சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு? ஆனா அவர் கோபமாயிட்டார். நான் பதறிட்டேன்.

’என்னாச்சு மோகன். நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலியே. வேலை முடிஞ்சிருச்சு. வீட்டுக்குப் போகலாம்னுதானே சொன்னேன்’ன்னு விளக்கினேன். உடனே அவர்... ‘வேலை முடிஞ்சுது, கிளம்புன்னு சொல்லுங்க. வீட்டுக்குப் போன்னு சொல்லாதீங்க. நான் எங்கே வேணா போவேன். என் இஷ்டம்’னு சொன்னதும்தான், செட்ல எல்லாருமே விழுந்துவிழுந்து சிரிச்சோம்.

ஒரு வார்த்தையை சொல்லி முடிச்சதும் அதுலேருந்து நாலு ஜோக் சொல்ற வேகம் கிரேஸி மோகனுக்கு உண்டு. ரஜினியோட ‘அருணாசலம்’ படத்துலயும் கிரேஸி மோகனுடனான அனுபவங்கள் மறக்கவே முடியாதவை’’

இவ்வாறு இயக்குநர் விசு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in