

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல், ஜூலை 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 - 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
எனவே, 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வடபழனி கமலா திரையரங்கில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில், தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கான தேர்தல், ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் நாதன், தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 27 மற்றும் 28 ஆகிய இரு தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல், ஜூலை 3-ம் தேதி வெளியிடப்படும்.
சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள், அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.