

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா (விஜய் சேதுபதி மகன்) உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’சிந்துபாத்’. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
அனைத்துப் பணிகளும் முடிந்து ஜூன் 21-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தது. ஆனால், தெலங்கானா உயர் நீதிமன்றம் இந்தப் பட வெளியீட்டுக்குத் தடை விதித்திருப்பதால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்?
'பாகுபலி 2' படத்தின் தமிழ் உரிமையை, அதன் தயாரிப்பாளர் ஆர்கா நிறுவனத்திடமிருந்து கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. இதற்கான பணத்தில் சில கோடிகளை ஆர்கா நிறுவனத்துக்கு, கே புரொடக்ஷன்ஸ் கொடுக்கவில்லை. பணத்துக்காக வழங்கப்பட்ட காசோலையும் வங்கியிலிருந்து திரும்பியுள்ளது.
இதனை முன்வைத்து தெலங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆர்கா நிறுவனம். இதை விசாரித்த நீதிமன்றம் 'சிந்துபாத்' மற்றும் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை வெளியிடத் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாதாடி தடையை உடைத்தது.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஆர்கா நிறுவனம். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், 'சிந்துபாத்' படத்தை தயாரித்துள்ள கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமே, இந்த வழக்கை சந்தித்துக் கொள்ளலாம் என்று விளம்பரத்தை துரிதப்படுத்தியது.
இந்தத் தடை நகலை க்யூப், யு.எஃப்.ஓ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டது ஆர்கா நிறுவனம். மேலும், கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. அதில் படத்துக்குத் தடை இருக்கும் போது எப்படி ட்ரெய்லர், போஸ்டர்கள் என அனைத்தையும் வெளியிட்டீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.