

‘சிந்துபாத்’ படத்தைக் கடந்த வாரம் பார்த்த இயக்குநர் ரத்னகுமார், முழுக்க விஜய் சேதுபதியிசம் என விமர்சனம் செய்துள்ளார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் எஸ்.யு.அருண் குமார். இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கடந்த 21-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாகக் கடந்த வாரமும் படம் ரிலீஸாகவில்லை.
ஆனால், நாளை (வியாழக்கிழமை) படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தைப் பார்த்த ‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார், படத்தைப் பாராட்டி விமர்சனம் செய்துள்ளார்.
“மனைவியைத் தேடி கடல் கடந்து, தடைகளைத் தாண்டி எதிரிகளைத் துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே ‘சிந்துபாத்’. அனைத்துத் தடைகளையும் தாண்டி, படத்தை வெளியிட சரியான வழி. படத்தைக் கடந்த வாரம் பார்த்தது என் அதிர்ஷ்டம். தயாராக இருங்கள் ரசிகர்களே... நீண்ட நாட்கள் கழித்து முழுக்க விஜய் சேதுபதியிசம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரத்னகுமார்.