

8 வருடங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ்.
‘ஆடுகளம்’, ‘பொல்லதவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய தனுஷ் படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர், ‘வடசென்னை’ படத்துக்கு இசையமைக்கவும் ஒப்பந்தமானார். அந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட தயாரான நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனவே, ‘வடசென்னை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்குப் பதில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படத்துக்கான உருவாக்கிய பாடலை வேறொரு படத்தில் பயன்படுத்தினார் ஜி.வி.பிரகாஷ்.
8 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் இருவரும் ‘அசுரன்’ படத்தில் இணைந்துள்ளனர். வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில், கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், யுகபாரதி எழுதிய ‘பொல்லாத பூமி’ பாடலை கென் மற்றும் டீ ஜே-வுடன் இணைந்து பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடலின் ரெக்கார்டிங் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
‘மயக்கம் என்ன’ படத்தில் ‘ஓட ஓட தூரம் குறையல’ மற்றும் ‘காதல் என் காதல்’ என இரண்டு பாடல்களைப் பாடினார். அதன்பிறகு, 8 வருடங்கள் கழித்து தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ்.