

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்ததில் மகிழ்ச்சி என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால், மாலையில் வந்து தன் வாக்கினை[ப் பதிவு செய்தார் சிவகார்த்திகேயன்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்தது. அதுவே ரொம்ப சந்தோஷம். வெளியூரில் இருந்ததினால் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும் அணி தான் ஜெயிக்கும். யார் வந்தாலும், தேவையுள்ள நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிகள் செய்வார்கள் என நம்புகிறேன்.
வெற்றி பெறப் போகிற அணிக்கு என் வாழ்த்துகள். நடிகர் சங்கம் சார்பாக உதவிகள் தேவை தொடர்பாக என்னவொரு முயற்சி எடுத்தாலும், அதில் ஒரு சிறுபகுதியாக இருந்திருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்.
இன்றைக்கு படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அனைவருக்குள்ளும் நாமும் நடிக்க வேண்டும் என்ற ஆசையுள்ளது. சங்கத்திற்குள் இருப்பவர்கள், இவர்கள் எல்லாம் நம் படத்தில் இருந்தாலும் நன்றாக இருக்கும் என்று நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும். அதுவும் நடந்துவிட்டால், அதுவொரு வளர்ச்சியாகவே பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.