

‘த லயன் கிங்’ தமிழ் வெர்ஷனில், சிம்பாவுக்கு டப்பிங் பேசியுள்ளார் சித்தார்த்.
1994-ம் வருடம் வெளியான ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ‘த லயன் கிங்’, தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான ‘த ஜங்கிள் புக்’ போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ‘த லயன் கிங்’ படம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. அதில், தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார் மதன் கார்க்கி.
டிஸ்னி - மார்வல் தயாரிப்பான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஹாலிவுட் படத்தை இந்திய மொழிகளில் டப்பிங் செய்தபோது, இங்கு பிரபலமான நட்சத்திரங்களை வைத்து டப்பிங் செய்தனர். படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்து, வசூல் சாதனை படைத்தது. அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், ‘த லயன் கிங்’ படத்தின் தமிழ் வெர்ஷனில், சிம்பா கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார் சித்தார்த்.
“ ‘லயன் கிங்’கை திரை மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. காலத்தால் அழியாத இந்த கிளாசிக் படத்தின் தமிழ்ப் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும் பாடுவதும், எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சித்தார்த்.
‘த லயன் கிங்’ படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனில், முஃபாசா கதாபாத்திரத்துக்கு ஷாரூக் கானும், சிம்பா கதாபாத்திரத்துக்கு ஷாரூக்கின் மகன் ஆர்யனும் டப்பிங் பேசியுள்ளனர்.