

ரஜினி நடித்துவரும் ‘தர்பார்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ரீமன் நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘தர்பார்’. ஆக்ஷன் த்ரில்லர் படமான இதை, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.
ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். மேலும், சுனில் ஷெட்டி, ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், யோகி பாபு, ஆனந்த ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. கடந்த மே 13-ம் தேதியுடன் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், மே 29-ம் தேதி முதல் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் மும்பையில் நடைபெறுவது போல் கதை உருவாக்கப்பட்டிருப்பதால், இரண்டாம்கட்டப் படப்பிடிப்பும் அங்கேயே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ரீமன் நடிக்கிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவர், ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “19 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறேன். என் சினிமா வாழ்க்கையிலேயே முதன்முறையாக தலைவர் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடிப்பது மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், லைகா நிறுவனத்துக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீமன்.