

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படத்தையும் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
‘ஹிப் ஹாப் தமிழன்’ ஆல்பத்தின் மூலம் கவனம் பெற்றவர் ஆதி. சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2015-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘கவண்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘Mr. லோக்கல்’ என ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி, அனிருத், யுவன் என மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர், பாடகரைத் தொடர்ந்து ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோ மற்றும் இயக்குநராக அறிமுகமானார். அவருடைய சொந்த வாழ்க்கைக் கதையையே படமாக எடுத்தார். இளைஞர்களிடையே அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரித்தார்.
அடுத்ததாக, பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘நட்பே துணை’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தையும் சுந்தர்.சி தயாரித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் குறைவைக்கவில்லை.
எனவே, ஆதி நடிக்கும் மூன்றாவது படத்தையும் சுந்தர்.சி தயாரிக்கிறார். இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆதி. இந்தப் படத்தை, குறும்பட இயக்குநரான ராணா இயக்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ படத்துக்கு இசையமைத்து வருகிறார் ஆதி.