

பாண்டவர் அணியினர் புதிதாக என்ன செய்துவிட்டார்கள்? என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல், வருகிற 23-ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளில் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. கடந்த முறை வெற்றிபெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ் அணி’யும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஆனால், அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அக்கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதி இல்லை எனவும் மாற்று இடத்தை இன்று தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் திடீரென்று தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர்கள் சேர்க்கை, பதவி மாற்றம், தகுதி நீக்கம் உள்ளிட்டவற்றில் உள்ள குளறுபடிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் நிறுத்தம் தொடர்பாக ராதாரவி, “சட்டம் தன் கடமையைச் செய்யும். முதலில் அவர்கள் செய்தது அனைத்துமே தவறு, பொய். 3 மாதங்கள் தலைவர், செயலாளர், பொருளாளர் கிடையாது. தேர்தலை நடத்த பத்மநாபன் சாரை நியமித்திருக்கிறார்கள். பதிவாளர் கொடுத்த வாக்காளர் லிஸ்ட் இது என்று பத்மநாபன் சார் சொன்னார். தற்போது அது இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
பாண்டவர் அணி நல்லது செய்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வார்கள். என்ன நல்லது பண்ணியிருக்கிறார்கள்?. அனைத்துமே முன்னாடி பண்ணியது தான். முன்பு இருந்தவர்கள் தலைமையில் கூட விலைவாசியைப் பொறுத்து, பென்ஷனை ஏற்றிக் கொண்டே வந்தோம். பாண்டவர் அணி வந்தவுடன் இப்போதுள்ள விலைவாசிக்குத் தகுந்தாறு பென்ஷனை ஏற்றினார்கள். புதிதாக என்ன செய்துவிட்டார்கள்?. 400 பேரை நீக்கி திருட்டுத்தனம் தான் செய்தார்கள். ஊழல் செய்தார்கள். அதன் விளைவு தான் இது” என்று பேசியுள்ளா ராதாரவி.