

‘தமிழரசன்’ படத்துக்காக இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி.
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது ‘தமிழரசன்’. இப்படத்தில் ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு, பழநிபாரதி, ஜெயராம் இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இதில், ‘பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா’ என்ற பாடலை, பாடகர் யேசுதாஸ் பாடியுள்ளார்.
கடந்த 2009-ல் மலையாளத்தில் வெளியான ‘பழசிராஜா’ படத்துக்குப் பிறகு திரைப்படப் பாடல்கள் பாடாமல் இருந்துவந்த ஜேசுதாஸ், தற்போது ‘தமிழரசன்’ படத்துக்காகப் பாடியுள்ளார். இளையராஜா இசையில், ‘நந்தலாலா’ படத்துக்குப் பின், சுமார் 9 ஆண்டுகள் கழித்து யேசுதாஸ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படத்தில் எஸ்.பி.பி.யும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். பழநிபாரதி எழுதியுள்ள ‘வா வா என் மகனே’ என்ற தாலாட்டுப் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார். பல வருடங்களாக இளையராஜா இசையில் பாடாத எஸ்.பி.பி., நீண்ட இடைவெளிக்குப் பாடியுள்ளார்.
இளையராஜா - எஸ்.பி.பி. இடையேயான ராயல்டி பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இளையராஜா இசையில் பாடியுள்ளார் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இருவரின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.