‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ தலைப்பு வைச்சதே கிரேஸி சார்தான்’’ - இயக்குநர் சரண் நெகிழ்ச்சி

‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ தலைப்பு வைச்சதே கிரேஸி சார்தான்’’ - இயக்குநர் சரண் நெகிழ்ச்சி
Updated on
1 min read

''வசூல்ராஜா எம்பிபிஎஸ்னு தலைப்பு வைச்சதே கிரேஸி மோகன் சார்தான்’’ என்று இயக்குநர் சரண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாடகக் கதாசிரியரும் திரைப்பட கதை வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன், நேற்று (ஜூன் 10-ம் தேதி) மாரடைப்பால் காலமானார்.

அவரின்  உடலுக்கு திரையுலகினர், நாடகக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் சரண், அவருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

’’ ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் கமல்ஹாசனை நடிக்கவைக்க அவரிடம் பேசினோம். படம் பிடித்திருந்தது என்ற போதிலும் கொஞ்சம் தயக்கமும் இருந்தது.

பிறகு ‘படத்துக்கு கிரேஸி மோகனை வசனம் எழுத வைக்கலாமா?’ என்று கேட்டார். சம்மதம் தெரிவித்தோம். உடனே கமல் நடிக்க ஒத்துக்கொண்டார். கிரேஸி மோகனும் வசனம் எழுத சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு, கமல் ஒருநாள் என்னை அழைத்தார். ‘கிரேஸி மோகன் சொன்னபடி வசனம் எழுதித் தந்துவிடுவார். இருந்தாலும் சரியான நேரத்தில் வசனங்கள் கைக்கு வர ஒரு வழி இருக்கிறது. படத்தில் ஏதேனும் ஒரு கேரக்டரை அவரைச் செய்ய வைத்துவிடுங்கள்’ என்று கமல் ஐடியா கொடுத்தார்.

படத்தில் மார்க்கபந்து எனும் கேரக்டரில் அவரை நடிக்கக் கேட்டோம். ‘முடியாது. எனக்கு டிராமா பாதிக்கும்’ என்றார். ‘உங்க நாடகப் பணிகள் பாதிக்காத வகையில் நடிக்கலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு’ என்று உத்தரவாதம் கொடுத்தபிறகுதான் நடிக்கவே ஒத்துக்கொண்டார்.

எல்லாம் ஓகேயான பிறகு, படத்துக்கு பூஜை போடப்பட்டது. அப்போது, பூஜையின் போது, படத்துக்கு ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்  என்றுதான் டைட்டில் வைத்திருந்தோம். பூஜை முடிந்து வெளியே வரும்போது, கமல் சார் என்னிடம், ‘கிரேஸி ஒரு டைட்டில் சொல்றாரு. நல்லாருந்தாப் பயன்படுத்திக்கங்க’ என்று சொன்னார். ‘கிரேஸி சார்... என்ன சார் டைட்டில்னு கேட்டதும், ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்று சொன்னார். அந்த டைட்டில் பிடித்துப் போகவே, அதையே படத்தின் பெயராக வைத்துக்கொண்டோம்.

ஆக, ’வசூல்ராஜா எம்பிபிஎஸ’்னு டைட்டில் வைச்சதே கிரேஸி மோகன் சார்தான்''.

இவ்வாறு இயக்குநர் சரண் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in