

பெண் எம்.பி.க்கள் மிமி சக்ரபர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் ஆகியோருக்கு, திவ்யா சத்யராஜ் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகைகள் மிமி சக்ரபர்த்தியும், நுஸ்ரத் ஜஹானும் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்துக்குச் செல்லும் முன், அதற்கு வெளியே நின்று இருவரும் புகைப்படங்கள் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ஆனால், இவர்கள் அணிந்த ஆடை குறித்து பல விமர்சனங்களும் கிண்டல்களும் வர ஆரம்பித்தன. இந்த இருவருக்கும் ஆதரவாகவும் பல குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
இந்நிலையில், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், புது பெண் எம்.பி.க்கள் இருவருக்கும் ஆதரவாகப் பேசியுள்ளார்.
"பெண்கள் என்ன உடை அணியலாம், என்ன அணியக்கூடாது என்று சொல்வதை நாம் நிறுத்தும் நேரம் வந்துவிட்டது. இதுதான் நமது கலாச்சாரத்தின் மிகப்பெரிய பாசாங்கு. நாம் கவனம் செலுத்த வேண்டிய பெரிய பிரச்சினைகள் உள்ளன. மொழி, ஆடை போன்ற விஷயங்களுக்காகப் பெண்கள் விமர்சிக்கப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. கவனம், எம்.பி.யாக அவர்களின் செயல்பாடு பற்றியே இருக்க வேண்டுமே தவிர, மற்ற விஷயங்கள் மீது அல்ல" என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
முன்னதாக ஒரு பேட்டியில், தனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.