

மணிரத்னம் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'மெளனராகம்', 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்', 'அலைபாயுதே' போன்ற மணிரத்னம் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.சி.ஸ்ரீராம். இப்படங்களின் கதையம்சத்தோடு இருந்த ஒளிப்பதிவால், இருவரது இணைப்பில் உருவாகும் படங்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், ரசிகர்களை ஏமாற்றும் விதமாக இருவரும் பரஸ்பரம் பேசி பிரிந்தார்கள். தனது படங்களுக்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார் இயக்குநர் மணிரத்னம். பி.சி.ஸ்ரீராமும் வெவ்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில், மணிரத்னம் தற்போது இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 29ம் தேதி முதல் சென்னையில் துவங்க இருக்கிறது.
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன் இருவரையும் வைத்து ஒரு காதல் கதையை இயக்க இருக்கிறார் மணிரத்னம் என்று செய்திகள் வெளிவரும் நிலையில், மணிரத்னம் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. இச்செய்தி தொடர்பாக துல்ஹர் சல்மானும் கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.