

திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் என நடிகர் கிஷோர் பாராட்டியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிஷோர் - லவ்லின் இருவரும் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவர்களின் வயதான பாத்திரங்களில் கிஷோர் - ஸ்ரீரஞ்சனி இருவரும் நடித்துள்ளனர். நாளை (ஜூன் 28) இந்தப் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில், திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் எனப் பாராட்டியுள்ளார் கிஷோர்.
“ ‘ஹவுஸ் ஓனர்’ பயணம் எனக்கு உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் சிறியது என்றாலும், நடிப்புப் பயிற்சி வகுப்பில் இருந்ததைப் போல நிறைய கற்றுக்கொண்டேன். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு அசாதாரண இயக்குநர். இது 100% உண்மை. வெளிப்படையாக, அவருடன் பணிபுரிந்த எவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள். இது வெறுமனே அவரது இயக்குநர் திறமை பற்றியது மட்டுமல்ல, அவர் படப்பிடிப்புத் தளத்தில் எல்லாவற்றையும் கையாண்ட விதத்தைப் பற்றியது.
‘ஹவுஸ் ஓனர்’ போன்ற சுயாதீனப் படத்தில் வேலையாட்கள் மிகக்குறைவு. பல பணிகளிலும் இயக்குநரே ஈடுபட்டார். இது நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. இன்றைய சினிமாவில் நாம் தொழில்நுட்ப ரீதியில் புத்திசாலித்தனமான, ஆனால் வாழ்க்கை அனுபவம் இல்லாத பல இளம் திரைப்பட இயக்குநர்களைச் சந்திக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலோர், தங்கள் பார்வையைப் பகிர்ந்துகொள்ளக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். சில சமயங்களில், நான் அவர்களிடம் நடித்துக்காட்ட சொல்வேன். அப்போதுதான் நான் அதைப் பின்பற்ற முடியும். இருப்பினும், லட்சுமி ராமகிருஷ்ணன் திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார்.
ஒரு கலைஞனாக, நாம் நடிக்கும் கதாபாத்திரத்தின் உணர்வுகளை முற்றிலும் உணர்வது என்பது பொதுவானது. ஆனால், என் மனைவி ராதா கதாபாத்திரத்தில் இருக்கும் வலி, சோகம் மற்றும் அன்பை என்னால் உணர முடிந்தது. படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் நிச்சயம் அதே அனுபவங்களைப் பெறுவர் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீரஞ்சனி மிக அற்புதமாக நடித்துள்ளார். நான் சொன்னது போல, அவரது கதாபாத்திரம் அவ்வளவு உணர்வுகளைக் கொண்டுள்ளது. அதை, அவர் பாராட்டத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளார். கிஷோர் மற்றும் லவ்லின் இருவரும்தான் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஆன்மாக்கள். அவர்கள்தான் லட்சுமி ராமகிருஷ்ணனின் கதையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார் கிஷோர்.