Last Updated : 15 Jun, 2019 02:15 PM

 

Published : 15 Jun 2019 02:15 PM
Last Updated : 15 Jun 2019 02:15 PM

மகா கலைஞன்’ மணிவண்ணன்! - இன்று நினைவுநாள்

முதலில் தோற்றுவிட்டால், எப்போதும் தோல்வியே வரிசை கட்டி வரும் என்று சொல்லமுடியாது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது சிலவற்றுக்கு மட்டுமே பொருந்தலாம். முயற்சியும் உழைப்பும் இருக்கிற இடத்தில், தோல்வி தொடர்ந்து வராது. வெற்றியைத் தடுக்கும் திராணியும் அதற்கு இருக்காது. குருநாதருக்கு ‘நிழல்கள்’ கதையை எழுதிய போது அது தோற்றுப் போனது. ஆனால், அடுத்தடுத்த தருணங்களும் தானே இயக்கிய போதும், அவர் அடைந்த வெற்றி, ஆழமானது; மிக உயரமானது. அந்த வெற்றிக்குச் சொந்தக்காரர் மணிவண்ணன்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவிட்டு, தானே படத்தை இயக்கும் வேலையில் இறங்கினார். அநேகமாக, பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து பாக்யராஜுக்குப் பிறகு வந்து படம் பண்ணியவர் மணிவண்ணனாகத்தான் இருக்கும். அந்தப் படம் சில சென்டர்களில், 200 நாட்களைக் கடந்து ஓடியது. பல சென்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அது... ‘கோபுரங்கள் சாய்வதில்லை’.

பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜா, மணிவண்ணனா என்று கார்ட்டூன் வடிவில் போஸ்டர் அடித்து, அதையே படத்துக்கு விளம்பரமாக்கினார் மணிவண்ணன்.

அடுத்தடுத்து படங்கள். எல்லாமே வெவ்வேறு ரகம். ஒரு வட்டத்துக்குள் சுற்றுவதை மணிவண்ணன் எப்போதுமே விரும்பியதில்லை. அழகற்ற பெண்ணின் மனநிலையை இதில் சொல்லியிருந்தார். கல்லூரிக் காலத்து காதலை, ‘இளமைக்காலங்கள்’ படத்தில் சொன்னார். எல்லாப் பாட்டும் செம ஹிட்டு. ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாடல்தான், எண்பதுகளின் காதல்கீதம். தோற்றுப் போன காதலின் வலிகளுக்கான ஒத்தடம்.

இதன் பிறகு அவர் எடுத்த படம், தமிழகத்தையே உலுக்கியது. ‘ஒரு படத்தைப் பாத்துட்டு, எவனாவது கொல்லுவானாய்யா? நல்லா கதை வுடுறாங்கய்யா’ என்று ஒருத்தர் கூட சொல்லவில்லை. ‘அப்படியாமே...’ என்று ஆச்சரியப்பட்டார்கள். ‘அப்படி என்னதாம்பா படத்துல இருக்கு. ரெண்டு தடவைப் பாத்தும் எனக்குத் தெரியலியே...’ என்று திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. படத்தின் பெயர்தான் ‘நூறாவது நாள்’. ஆனால் இருநூறு நாட்களைக் கடந்து ஓடியது. மோகன், நளினி, விஜயகாந்த், சில காட்சிகளில் வரும் மொட்டை சத்யராஜ், அந்த சிகப்புக் கலர் கோட்டு, கண்ணாடி, சர்ச்..., குதிரைப் படம் போட்ட அட்டைப்பட வாரப் பத்திரிகை என மிரட்டியெடுத்திருந்தார் மணிவண்ணன்.

சத்யராஜ் எனும் வைரம். மணிவண்ணன் கையில் கிடைத்தது. இன்னும் இன்னுமாகப் பட்டை தீட்டப்பட்டது. ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறியேம்மா’ என்று சத்யராஜின் மாடுலேஷன் டயலாக் (24 மணி நேரம்) ஹிட்டடித்தது. அது மணிவண்ணன் ஸ்டைல் என்பதெல்லாம் பின்னாளில், மணிவண்ணன் நடிக்க வந்தபோதுதான் தெரிந்தது. கால்வாசி லொள்ளு, கால்வாசி ஜொள்ளு, கால்வாசி நக்கல், கால்வாசி நையாண்டி என கலவையாய் வந்து நின்ற சத்யராஜ்... கூடவே கவுண்டமணி என்று அந்த ஜோடியை ஹிட்டான ஜோடியாக்கியதில் மணிவண்ணனுக்குப் பெரிய பங்கு உண்டு.

நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம் என்று ஒருபக்கம் த்ரில்லர் க்ரைம் படங்கள், ’இங்கேயும் ஒரு கங்கை’, ’முதல் வசந்தம்’, ’குவாகுவா வாத்துகள்’, ‘சின்னதம்பி பெரியதம்பி’ என காமெடியும் சென்டிமென்ட்டும் கலந்த படங்கள், ’இனி ஒரு சுதந்திரம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ’புயல் பாடும் பாட்டு’ என அரசியல், சமூக விழிப்பு உணர்வுப் படங்கள் என வெரைட்டி பியூட்டி காட்டி, அசத்தினார் மணிவண்ணன்.

பாரதிராஜாவின் சிஷ்யர்தான் மணிவண்ணன். ஆனாலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு, களமாடினார். எந்தக் கதையாக இருந்தாலும் அதைச் சிறப்புற மக்களுக்குப் படையலிட்டதுதான் மணிவண்ணன் ஸ்டைல்.

அதேபோல் மணிவண்ணன் ஸ்பெஷல் என்பதே... அவரின் டைமிங்க் ரைமிங் வசனக்கள். சின்னதாய் ஒரு கதை, அதை பூ மாதிரி விவரிக்கிற திரைக்கதை, அந்தத் திரைக்கதையை அர்த்தப்படுத்துவற்கான வசனங்கள்... என அமர்க்களப்படுத்திவிடுவார் மணிவண்ணன்.

மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி என்றாலே அங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்றார்கள் ரசிகர்கள். அங்கே சத்யராஜ், கவுண்டமணி என எல்லாருக்குள்ளும் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருப்ந்தார் இயக்குநர்.

‘அமைதிப்படை’ அமாவாசையை, இன்னும் எத்தனை அமாவாசைகள் கடந்தாலும் நினைவில் இருக்கும். கோவை பாஷை எப்படி இருக்கும் என்பதை, கோயம்புத்தூரே போகாதவர்கள் கூட, மணிவண்ணன் படங்களைப் பார்த்துதான் தெரிந்துகொண்டார்கள். ’ண்ணா’ போட்டுப் பேசும் வழக்கத்தையும் ரசிகர்களுக்கு இவரே ஏற்படுத்திக் கொடுத்தார்.

குருநாதர் பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ படத்தில் வில்லனாக நடித்ததுதான் நடிப்புக்கான ஆரம்பம். பிறகு, சிஷ்யன் சுந்தர்.சி. இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ மூலம் இன்னும் இன்னும் எல்லோருக்கும் பிடித்தவரானார்.

 

அப்புறமென்ன... வில்லன், காமெடி கலந்த வில்லன், கேரக்டர் ரோல், காமெடி கலந்த கேரக்டர் ரோல் என்று எல்லோரிடமும் ஜோடி போட்டு நடித்தார். யாரிடம் நடித்தாலும் ஜோடிப்பொருத்தம் செம ரகம். அதுதான் மணிவண்ண முத்திரை.

இயக்குநராகவும் நடிகராகவும் மக்கள் மனங்களில் அற்புதமானதொரு இடம் பிடித்து, இன்றைக்கும் அந்த இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிற மணிவண்ணனின் நினைவு நாள் இன்று (15.6.19).

சமூக அக்கறையும் திரை மொழியின் ஜாலங்களும் உணர்ந்து, அறிந்த மணிவண்ணனை இந்தநாளில் நினைவுகூர்வோம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x