

விஜய் சேதுபதி நடித்துவரும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர், தற்போது இயக்கிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. இதில், ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க, ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மீசையுள்ள கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு நிவேதா பெத்துராஜும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரை, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதியும் வில்லனும் மோதும் சண்டைக் காட்சியை இங்கு படமாக்கி வருகின்றனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு, விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி மியூஸிக் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.