

சமீபகாலமாக தமிழ் சினிமாவை ஒரேயடியாக மறந்துவிட்டீர்களே?
அப்படியெல்லாம் இல்லை. என் அதிர்ஷ்டமோ என்னவோ, தமிழ், கன்னடத்தில் நான் அறிமுகமான படம் பெரிய ஹிட். தெலுங்கில் என் முதல் படமான ‘எக்கடிக்கி போதாவே சின்னதானா’வும் பெரிய ஹிட். சிறந்த நடிகை என அந்த படத்துக்கு விருதுகூட வாங்கினேன்.
அந்த இடத்தை தக்கவச்சிட்டிருக்கேன். இன்னும் சொல்லணும்னா 2017 செப்டம்பர்ல ஆரம்பிச்சு இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம்னு இரவு, பகலா நடிச்சிட்டிருக்கேன். வேலையை ரசிக்கிறதால சோர்வே தெரியலை.
தமிழில் நீங்கள் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் வெளியாகாமல் உள்ளதே?
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்தபோது பெற்ற பயிற்சிதான் தெலுங்கில் மிகவும் உறுதுணையாக இருக்கு. இயக்குநர் செல்வராகவன் அப்படி வேலை வாங்குவார். மீண்டும் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு அமையணும். இந்த படங்கள் சீக்கிரமே வெளியாகணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.
ஐஸ்வர்யா ராஜேஷுடனான நட்பு குறித்து..
‘கனா’ படம் நடிக்கத் தொடங்கியது முதல் ஒவ்வொரு நகர்வையும் ஒரு சகோதரிபோல என்கிட்ட பகிர்ந்துப் பாங்க. இந்த நட்பு எப்போதும் தொடரும்.
தமிழ், தெலுங்கில் நீங்கள் நடித்துவரும் படங்கள் குறித்து..
‘ஐபிசி 376’ தமிழ் படத்தில் போலீஸ் கதாபாத்திரம். இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் புதிய முகம். வேறொரு வித்தியாசமானகளம். முழுக்க கமர்ஷியலா இருக்கும்.
தெலுங்கில் ‘கல்கி’ படப்பிடிப்பு இப்போதுதான் முடிந்தது. அதில் முஸ்லிம் பெண்ணாக வருகிறேன். முகம் காட்டாமல் பெரும்பாலும் கண்களை மட்டுமே காட்டி நடித்திருக்கிறேன். பெரிய அளவில் எனக்கு பெயர் கிடைக்கும்.
தெலுங்கில் கிடைத்த நம்பிக்கையில் தான் தமிழிலும் நாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்கிறீர்களா?
நீ முந்தி, நான் முந்தி என போட்டி, நாயகன் படம், நாயகி படம், நம்பர் ஒன் நாயகி என்றெல்லாம் போட்டி போட சினிமா என்ன ஓட்டப் பந்தயமா? இவற்றை எல்லாம் நான் பொருட்படுத்து வதே இல்லை. கிடைக்கும் கதாபாத்திரத்தை சரியாக ஏற்று நடிக்கணும். அவ்ளோதான்.
தமிழில் உங்களை அறிமுகம் செய்த பா.இரஞ்சித், இந்திக்கு போகிறாரே, உங்களுக்கு அழைப்பு வருமா?
நல்ல விஷயம். ‘அட்டக்கத்தி’ படத்தில் நடித்த பலரையும் அடுத்தடுத்த படங்களிலும் பயன்படுத்திய இயக்குநர் அவர். ஒரு கதாபாத்திரம் நந்திதாவுக்கு சரியாக இருக்கும் என்று கருதினால், நிச்சயம் மீண்டும் அழைத்து வாய்ப்பு கொடுக்கும் படைப்பாளி அவர்.
மலையாள சினிமா பக்கம் எப்போது?
எனக்கும் அந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயம் அதுவும் அமைய வாய்ப்பு உள்ளது.