

இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் சூட்சமம் இருப்பதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
2017 - 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
எனவே, 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணியில் உள்ள சூட்சுமம். அவரை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராவதை தடுக்கும் ஒரு முயற்சியே. காலம் பதில் சொல்லும். இயக்குனர் இமயம் இந்த சூழ்ச்சியை முறியடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் கூறியதன் பின்னணி என்ன?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், பாரதிராஜா தலைமையில் மற்றுமொரு அணி களம் காணவுள்ளது.
பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்தினால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பதாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. சுரேஷ் காமாட்சி, சேரன், டி.ராஜேந்தர், ராதாரவி ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் பாரதிராஜாவுக்கு ஆதரவாக இருப்பது நினைவுக் கூரத்தக்கது.
நடிகர் சங்கத்தில் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் என இரட்டை பதவியில் விஷால் இருந்ததை பல தயாரிப்பாளர்கள் எதிர்த்தனர். இப்போது இயக்குநர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் தலைவராக பாரதிராஜா இருந்தால், மீண்டும் இதே போன்றதொரு பிரச்சினை ஏற்படலாம். இதனையே எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.