Last Updated : 14 Jun, 2019 05:30 PM

 

Published : 14 Jun 2019 05:30 PM
Last Updated : 14 Jun 2019 05:30 PM

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா- விமர்சனம்

பொது இடத்தில், கொலையோ கொள்ளையோ, அத்துமீறலோ வன்முறையோ நடக்கும்போது, அதை செல்போனில் படம்பிடித்து, அப்லோடு செய்யும் இந்த உலகத்தில், தட்டிக்கேட்க ஒருவராவது வருவார்கள் என நம்பிக்கையும் ஆசையுமாகச் சொல்லியிருப்பதுதான் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ திரைப்படம்.

’பொது இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்சினை; ஆபத்து. அதைப் பார்த்து நமக்கேன் வம்பு’’ என்று இல்லாமல், அதைத் தடுத்து நிறுத்த மனிதர்கள், முஷ்டி மடக்கி வருவார்கள் என்கிற மெசேஜை, யு டியூப் சேனல் மூலம் பிரபலமானவர்களைப் படத்தில் நடிக்கவைத்திருப்பது புதுமை. ஆனால், இது மட்டுமே புதுமை என்பதுதான் யோசிக்கவைக்கிறது.

ரியோவும் விக்னேஷ்காந்தும் நண்பர்கள். அனாதை இல்லத்தில் வளர்ந்த இவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்து வளர்த்து வருபவரும் (அரவிந்த்) அங்கு வளர்ந்தவர்தான். ஜாலியும்கேலியுமாக யு டியூபில் ஏதாவது செய்து கொண்டிருப்பதுதான் இவர்களின் வேலை, பொழுதுபோக்கு. அப்படித்தான் ஒருமுறை, பிராங்க் ஷோ நடத்தும் போது, முக்கியப் பிரமுகரான ராதாரவியையும் ஊடக நிருபரான நாயகியையும் கத்திவைத்து ஷாப்பிங் மாலில் மிரட்டுகிறார்கள்.

அதையடுத்து, அவர்களின் தைரியத்தைக் கண்டு உணர்ந்த ராதாரவி, அவர்களுக்கு மூன்று பரிட்சைகள் வைக்கிறார். மூன்றிலும் ஜெயித்துவிட்டால், மிகப்பெரிய தொகையைத் தருகிறேன் என்கிறார். அந்த மூன்று விஷயங்கள் என்ன, அவர்கள் அவற்றை எப்படிக் கையாள்கிறார்கள், ராதாரவி இப்படிச் செய்வதற்கு என்ன காரணம், மூன்றிலும் இவர்கள் வென்றார்களா என்பதையெல்லாம் சொல்லிவிரிகிறது திரைக்கதை.

இணையதளம், ஊடகம், யுடியூப் சேனல் என கதையை எடுத்துக்கொண்டதாலேயே, படம் முழுக்க கலாய்த்து எடுத்துவிடுகிறார்கள். பிரேக்கிங் நியூஸ், அரசியல்வாதிகள் என எல்லாப் பக்கமும் ரவுண்டு கட்டி அடித்திருக்கும் விதம் ரசிக்கும்படி இருக்கிறது.  

படத்தின் நாயகனாக ரியோராஜ். காமெடி, டைமிங், கலாய் என இருப்பதால் அந்த வேடம் பொருந்திப் போகிறது இவருக்கு. மற்றபடி, சென்டிமென்ட், காதல், ஆக்ரோஷக்  காட்சிகளிலெல்லாம் இவரிடம் ரொம்பவும் எதிர்பார்த்தால் அது நம் தவறுதான்!

வழக்கம் போல், விக்னேஷ் காந்த். நாயகனின் நண்பன். ஓரிரு இடங்களில் வெளுத்து வாங்குகிறார். ஆனால், இன்னும் இந்தக் கேரக்டர் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கவேண்டும். அது மிஸ்ஸிங். மற்றபடி, எப்படி பிரபலமாவது, பிரேக்கிங் நியூஸில் இடம்பெறுவது என்று இருவரும் யோசிப்பதாகக் காட்டி,. பலரையும் நக்கலடித்திருக்கிறார்கள்.

டிவி ரிப்போர்ட்டராக வரும் ஷெரின் நாயகி. இப்படியொரு கேரக்டரே இல்லாமல் கூட படம் எடுத்திருக்கலாம். நல்லவேளையாக ஆறுதல்... படத்தில் டூயட் இல்லை (அப்படியொரு காட்சியில் அதையும் கலாய்த்திருப்பது சூப்பர்). காதல் காட்சிகளும் இல்லை. காட்சிகளும் இல்லை.

அரசியல்வாதியாக வருகிறார் நாஞ்சில் சம்பத். வழக்கம் போல் கெட்ட அரசியல்வாதி. ஆர்.கே.நகரை யு.கே.நகர் என்று மாற்றிய விதம் ரசனை. அதேசமயம் திடீரென நாயகியை, அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்தின் மகள் என்று காட்டுவதும் இவரின் மகள் என்பதே யாருக்கும் தெரியாது என்று சொல்வதும் என்று விடுகிற கதை நம்பும்படியாக இல்லை. கதைக்கு வலு சேர்ப்பதாகவும் இல்லை. ’ஒரு மாநிலத்தில் ரெண்டு முதல்வர்கள் இருக்கும் போது, ஒரு தொகுதில ரெண்டு எம்.எல்.ஏ. இருக்கக்கூடாதா?’ என்பது போன்ற அரசியல் சரவெடிகள், கொளுத்திப் போடுவதெல்லாம் ஓகே. குறிப்பாக, ‘மக்கள்னா யாரு?’ என்று நாஞ்சில் சம்பத் பேசுகிற வசனம் பொளேர் ரகம். ’ஓட்டு போடுறவங்களுக்கு பணம் கொடுத்ததெல்லாம் போதும்; ஓட்டு எண்ணுறவங்களுக்கு பணம் கொடுத்தேன்’ என்பதும் மனநிலை பாதிக்கப்பட்ட நிறுத்தி, எம்.எல்.ஏ.வாக்குவதும் ரொம்பவே டூமச்.

அரவிந்த், மயில்சாமி, ராதாரவி, விவேக் பிரசன்னா என மிகக்குறைவான நடிகர் பட்டாளம். தெருவில் திரிந்துகொண்டிருப்பவர்களிடம் காட்டுகிற கரிசனம், நெகிழ்ச்சி. ஹவுஸ் ஓனர் மயில்சாமியின் நடிப்பு யதார்த்தம். தன் நடிப்பால், கேரக்டருக்கு வலுசேர்த்துவிடுகிறார் ராதாரவி. அவருக்கு ஒரு ப்ளாஷ்பேக். அதுதான் கதைக்கான கரு. இன்னும் கொஞ்சம் வலுவூட்டியிருக்கலாம்.

‘கனா’ தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். யதார்த்தங்களை மீறிய காட்சிகளை, படம் முழுவதும் வைத்திருந்தாலும் அந்தக் கடைசி கால்மணி நேர காட்சிகளும் படம் சொல்ல வருகிற மெசேஜும்... இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனை மன்னிக்கவைத்துவிடுகிறது. இசை ஷபீர். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், இரைச்சல்கள் இல்லை என்பதே ஆறுதல். படத்தைத் தாங்கி நிற்கும் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’... க்ளைமாக்ஸ் காட்சிக்காக, நல்ல மெசேஜுக்காகப் பொறுத்துக்கொண்டு பார்க்கலாம்.

  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x