Last Updated : 09 Jun, 2019 11:06 AM

 

Published : 09 Jun 2019 11:06 AM
Last Updated : 09 Jun 2019 11:06 AM

சுடப்பட்ட நிலையிலயும், ‘அம்மா நல்லாருக்காங்களா?’ன்னு கேட்டாரு எம்ஜிஆர் ’’ - நெகிழும் சிவக்குமார்

''எம்ஜிஆர் சுடப்பட்டு, ஆஸ்பத்திரில இருக்காரு. அவரைப் பாக்கப் போயிருந்தேன். அப்போ, ‘அம்மா நல்லாருக்காங்களா?’ன்னு கேட்டாரு’’ என்று நெகிழ்ந்து சொல்கிறார் நடிகர் சிவக்குமார்.

நடிகர் சிவக்குமார் தனியார் இணையதளச் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

என் அம்மா, எப்போதும் என் வளர்ச்சி தடைப்பட்டுவிடக் கூடாது என்றே நினைத்துக்கொண்டிருப்பார். இப்படித்தான் ஒருமுறை, அம்மா பரணில் ஏறி, ஏதோவொரு பாத்திரம் எடுத்துவிட்டு கீழே இறங்கும் போது, விழுந்துவிட்டார். இதனால், கையில் அடிபட்டு, உடைந்துவிட்டது.  கைமணிக்கட்டில் உடைந்து, கை தொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது என் அம்மா உடன் இருந்தவர்களிடம், ‘இதோ... இப்படி கை உடைஞ்சிருச்சு’ன்னு என் பையனுக்கு தகவல் சொல்லி, அவன் வேலையைக் கெடுத்து, அவனை இங்கே வரவைச்சீங்கன்னா, நான் பாழுங்கிணத்துல விழுந்து செத்துப்போயிருவேன். அதனால அவனுக்கு யாரும் எதையும் சொல்லக்கூடாது’ன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க.

இதுக்கு அப்புறம், ‘கந்தன் கருணை’ படம் ரிலீசாச்சு. அப்பதான், எம்ஜிஆர் சுடப்பட்டார்னு செய்தி வந்துச்சு. தமிழகமே பரபரப்பாக் கிடக்கு. நான் ஒருவழியா ஊருக்குப் போயி, அம்மாவைப் பாக்கறேன். அங்கே, அம்மா, இன்னொரு கையால மாவு ஆட்டிட்டிருக்காங்க.

அப்புறமா, சென்னைக்குத் திரும்பி வந்து, ஆஸ்பத்திரில இருக்கிற எம்ஜிஆரைப் பாக்கப் போனேன். ஒரே கூட்டம். ‘என் தலைவர் குணமாகணும்’னு பல பேரு மொட்டை போட்டிருந்தாங்க. ரூம் வாசல்ல, ஸ்டண்ட் ஆட்கள் பாதுகாப்புக்கு நின்னாங்க. அப்ப எம்ஜிஆர் கழுத்துல கட்டோட, உத்துப்பாத்தாரு. மெல்ல நடந்துவந்தாரு. ‘நீ சிவக்குமார்தானே’ன்னு சொல்லிட்டு, தடக்குன்னு கையைப் பிடிச்சு உள்ளே இழுத்தாரு. நான் கட்டில்ல போய் விழுந்தேன்.

‘அண்ணே... ஊருக்குப் போயிருந்தேண்ணே. அதான் தகவல் தெரிஞ்ச உடனேயே வரமுடியலை’ன்னு தயங்கித்தயங்கிச் சொன்னேன். உடனே எம்ஜிஆர், பேசமுடியாத நிலையிலயும், ‘ஊருக்கா? அம்மா... அம்மா... கை எப்படி இருக்கு? நல்லாருக்காங்களா?’ன்னு பாதி வார்த்தையாவும் பாதி ஜாடையாவும் கேட்டாரு’

எம்ஜிஆரே செத்துப் பொழைச்சு வந்திருக்காரு. பேசமுடியலை. ஆனாலும் கூட, அந்தச் சூழல்லயும் ‘ஊருக்குப்போனியே... ஊர்ல அம்மா எப்படி இருக்காங்க’ன்னு கேக்கறார்னா... எம்ஜிஆரோட  பண்பட்ட குணத்தைத் தெரிஞ்சுக்கலாம்.

நான் தேம்பித்தேம்பி அழுதுட்டிருந்தேன். எம்ஜிஆர்  எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டிருந்தார்.

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சிவக்குமார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x