

கிரேசி மோகனின் நகைச்சுவை உணர்வுக்கு ஓய்வே கிடையாது என நடிகர் பிரசன்னா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.
கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பிரசன்னா, “சில நாட்களுக்கு முன்புதான் எனது நண்பர் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவைச் சந்தித்தேன். கிரேசி மோகன் சார் பற்றியும், ‘கல்யாண சமையல் சாதம்’ படத்துக்கு அவர் எப்படி மதிப்பு கூட்டினார் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அவரது எழுத்தும் நடிப்பும் எப்போதுமே சிறப்பாக இருந்தவை. அவரது நகைச்சுவை உணர்வுக்கு ஓய்வே கிடையாது. ஆன்மா சாந்தியடையட்டும் கிரேசி சார். உங்கள் மறைவைக் கண்டிப்பாக உணர்வேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.
‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.