

ஜெயம் ரவி 25-வது படத்தின் பூஜை மற்றும் அவருடைய 16-ம் ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி’. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். 25-வது படத்தை, லக்ஷ்மண் இயக்குகிறார். ஜெயம் ரவி - லக்ஷ்மண் கூட்டணியில் ஏற்கெனவே ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
பாலிவுட் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்த நிதி அகர்வால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை, இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அத்துடன், ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிகழ்வும் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அஹமது இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இதில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார்.