

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசு என எல்லா இடங்களிலும் விஷால் மீது அதிருப்தி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் சங்கீதா.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதியுள்ளன.
சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுள்ள சங்கீதாவிடம், உங்கள் அணியில் இருப்பவர்கள் விஷாலை மட்டும் குறிவைத்துத் தாக்குவது ஏன்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு, “சுவாமி சங்கரதாஸ் அணி மட்டும் விஷாலைத் தாக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும் தாக்குகின்றனர். தமிழக அரசுத் தரப்பில் இருந்தும் அவர்மேல் நிறையக் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். எல்லா இடத்தில் இருந்தும் அவர்மேல் அதிருப்தி இருக்கிறது. அவருடைய செயல்பாடுகளில் நிறைய தேக்கம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை.
கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்றதால்தான் எம்எல்ஏ சீட் கொடுத்தனர் எனவே கருணாஸே ஒப்புக் கொண்டார். ‘பாண்டவர் அணி’யை உருவாக்கும்போது சில கொள்கைகள் இருந்தன. ‘இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடமாட்டோம். அப்படி யாராவது இங்கிருந்து அரசியலுக்குச் சென்றால், இந்தப் பதவியில் இருந்து விலகிவிடுவோம்’ என்பதும் அதில் ஒரு கொள்கை. அந்தக் கொள்கையைக் காப்பாற்ற முடியாதபோது, அது எனக்கு தவறாகப் பட்டது.
சரத்குமார் ஒரு கட்சி தொடங்கி, அந்தக் கட்சி சார்பில் இருந்தார், ராதாரவியும் அப்படித்தான் என கடந்த தேர்தலின்போது எதிரணியின்மீது குற்றச்சாட்டு வைத்தோம். எல்லா நிகழ்ச்சிகளையும் ராதிகாவின் ரடான் நிறுவனம்தான் செய்கிறது என அந்நிறுவனம் மீது அதிருப்தி வைத்தோம். இப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வெற்றிபெற்ற பிறகு, நாமே அந்தத் தவறுகளைச் செய்வது எப்படிச் சரியாகும்? என்பதுதான் என் ஆதங்கம்.
என் தலைவன் வாக்கு கொடுத்தால், அதைக் காப்பாற்ற வேண்டும் என நான் நினைப்பேன். அப்படி தலைவன் வாக்கைக் காப்பாற்றினால்தான் தொண்டனாக எனக்கு மரியாதை. அந்த மரியாதை கிடைக்காதபோது, அது எனக்குத் தவறாகப் பட்டது” எனப் பதில் அளித்துள்ளார் சங்கீதா.